அ தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ! இராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு

இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட மோதலில், அரிவாளால் வெட்டப்பட்டு, அதிமுக நிர்வாகி காயமடைந்தார்.

 

இராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தலில், அதிமுக. கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கடந்த 1ஆம் தேதி பெரியபட்டினத்தில் அமைச்சர் மணிகண்டன், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர்.

 

அப்போது காலி பாட்டில்கள் வீசப்பட்டன. இதில் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக அவைத் தலைவர் உடையத் தேவன் காயமடைந்தார். ஏப்ரல் 5ஆம் தேதி கீழக்கரை லிட்டரரி கிளப் பகுதியில் வாக்கு சேகரித்த போது பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து எம்ஜிஆர் மன்ற செயலர் தமிழ் மகன் உசேன், நகர் அதிமுக செயலர் ஜகுபர் உசேன் ஆகியோர் பிரசாரம் செய்யாமல் திரும்பினர்.

 

இந்நிலையில் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடியில் நேற்று மாலை வாக்கு சேகரிக்க சென்ற பாஜக வேட்பாளரை திருப்பாலைக்குடி அதிமுக  இளைஞர் பாசறை செயலர் பாய்ஸ் (எ) முகமது காசின் வரவேற்றார்.

 

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த யூசுப் என்பவருக்கும், முகமது காசின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் யூசுப் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த முகமது காசின் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். அவ்வப்போது நடைபெற்று வரும் மோதல் சம்பவங்களால் இராமநாதபுரத்தில் பதற்றம்  நிலவுகிறது.

-மகேந்திரன், இராமநாதபுரம்


Leave a Reply