நதிகள் இணைப்புக்கு ஆணையம்; விவசாயிகளுக்கு பென்ஷன்! பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இன்னும் பல அதிரடிகள்

புதுடெல்லி: நதிகளை இணைப்பதற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாத கடன் உள்ளிட்ட பல அறிவிப்புகள், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

 

 

மக்களவை தேர்தலை ஒட்டி தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் 2019 மக்களவை தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமீத்ஷா ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

 

பாஜக தேர்தல் அறிக்கை, “சங்கல்ப் பத்ரா” என்ற பெயரில் 45 பக்கங்களுடன், 75 சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:

 

சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். கிராம வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும். கிசான் சம்மன் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகை தரப்படும்.

 

நதிகளை இணைப்பதற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும். தேசப் பாதுகாப்புக்கு மோடி அரசு முன்னுரிமை தரும். பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும். வரும் 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு தரப்படும்.

 

வரும் 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து  ஜிஎஸ்டி முறையை மேலும் எளிதாக  முறையில் கொண்டு வரப்படும். நாடு முழுவதும் 75புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.

 

சபரிமலை உள்ளிட்ட விவகாரங்களில் மக்களின் மத நம்பிக்கையை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எனினும் நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவை குறித்து இதில் எந்த வாக்குறுதியும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply