மோடியை எதிர்த்து போட்டி இடவில்லை! அய்யாக்கண்ணுவின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்

சென்னை: பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுவார்கள் என்ற முடிவில் இருந்து அய்யாக்கண்ணு திடீரென பின்வாங்கியுள்ளார். அமித்ஷாவுடனான சந்திப்பே, அவரது மனமாற்றத்திற்கு காரணம் என்று தெரிகிறது.

 

 

விவசாயிகளை பாஜக அரசு புறக்கணித்துவிட்டதாக கூறி, பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுவார்கள் என்று, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு  தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷாவை, அய்யாக்கண்ணு தலைமையிலான குழு டெல்லியில் சந்தித்தது. அப்போது பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பின்னர் நிருபர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, அமித்ஷாவை சந்தித்தது மன நிறைவை தருகிறது. விவசாயிகள் நலன் குறித்த முக்கியமான திட்டங்கள் பாஜகவின்  தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று அவர் உறுதியளித்தார். எனவே, மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடும் முடிவை கைவிட்டோம் என்றார்.

 

கடுமையாக மோடியை எதிர்த்து வந்த விவசாயி அய்யாக்கண்ணுவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க.விடம் அவர் விலை போய்விட்டதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

இது குறித்து அய்யாக்கண்ணுவிடம் கேட்டதற்கு, வாரணாசியில் நிர்வாணமாக சென்று, மோடிக்கு எதிராக மனுதாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதை அறிந்து, எங்களை அழைத்து பேசினார்கள்.

 

விளைபொருள்களுக்கு உரிய விலை, நதிகள் இணைப்பு, உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள். எனவே இதையேற்று மோடிக்கு எதிராக நாங்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.


Leave a Reply