பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் நாசம் –  ஓட்டப்பிடாரத்தில் கனிமொழி ஓட்டு சேகரிப்பு..

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் மிக மோசமாக மக்களை நடத்தினர். ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அ.தி.மு.க. அரசு தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்க வில்லை.

மத்தியில் இருக்கும் பா.ஜனதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை கொண்டு வந்து நமது பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைக்கு உருவாக்கி உள்ளது. நாம் அந்த பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் இது. இதனை புரிந்து கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க. வாக்குறுதி கொடுத்தால் அதனை நிறைவேற்றி தரக்கூடிய இயக்கம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாய கடன்களை ரத்து செய்து தருவதாக அறிவித்து உள்ளார். நிச்சயம் ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலை என்பது 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை மக்கள் எங்களுக்கு தர வேண்டும். பா.ஜனதா அரசின் ஜி.எஸ்.டி. வரியால் கடலைமிட்டாய், தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.


Leave a Reply