கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமி மீட்கப்பட்ட இடத்தில் உள்ள செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை என்று கடந்த 25-ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு கோவை- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் துடியலூரில ஏராளமானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சிறுமியின் உறவினர்கள், ஊர்மக்கள் சேர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், கோட்டாட்சியர் அளித்த உறுதியை அடுத்து 5 மணிநேர போராட்டத்தை கைவிட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து வேறு திசையில் திருப்பி விடப்பட்டது. இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி.மணி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 4 ஆய்வாளர்கள், இரு ஏ.டி.எஸ்.பி.களான முருகசாமி, மாடசாமி ஆகியோர் வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு சிறுமி மீட்கப்பட்ட இடத்தில் உள்ள செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் கடந்த வியாழனன்று குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற துண்டு பிரசுரங்களை துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பொதுமக்களிடையே காவல் துறையினர் வழங்கி வருகின்றனர்.துண்டுபிரசுத்தில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும்,தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் ..எனவும் அச்சிடப்பட்டுள்ளது.ஏற்கனவே பொள்ளாச்சி பெண்கள் வன்புணர்வு வழக்கிலேயே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் பொதுமக்களிடையே கடும் கோபத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் துடியலூர் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும்,காவல் துறையினரிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.