தயாரிப்பாளர் மீது பொய்யான புகார் கொடுத்த நடிகை ஸ்ரீரெட்டியை போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதையடுத்து, சென்னை வளசரவாக்கத்தில் குடியேறினார். அதன் பின்னர், தமிழகத்தில் நிலவும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அண்மையில், பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து அவர்களுடன் இணைந்து போராடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். ஓநாய்கள் ஜாக்கிரதை, சுவாதி கொலை வழக்கு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுப்பிரமணி மீது புகார் அளித்துள்ளார். மேலும், குடிபோதையில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சுப்பிரமணியின் உறவினர் கோபி மீதும் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீ ரெட்டி கூறுகையில், தயாரிப்பாளர் சுப்பிரமணி எனது வீட்டிற்கு வந்ததோடு, குடிபோதையில் என்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். என்னுடைய ஆடைகளை பிடித்து இழுத்தார். எனது வீட்டின் கண்ணாடியையும் அவர் உடைத்துள்ளார் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.
ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து விசாரிக்க போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துள்ளனர். ஆனால், அவர் வரவில்லை. மாறாக மாலை 3.30 மணிக்கு மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீரெட்டி தான் சுப்பிரமணியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் பிறகு அவருக்கு மதுவை ஊற்றி குடிக்கச் சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்ரீரெட்டி மட்டும் பழச்சாறு குடித்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 4 மாதமாக ஸ்ரீரெட்டி வசிக்கும் வீட்டிற்குக் கூட சுப்பிரமணி தான் வாடகை கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஸ்ரீரெட்டி சமாதானமாக செல்வதாக கூறியதைத் தொடர்ந்து ஸ்ரீரெட்டியை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.