`எவ்வளவு விஷமத்தனம்?’ – நெட்டிசனுக்கு எதிராகக் கொந்தளித்த அனுபம் கெர்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படத்தின் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக பாலிவுட் நடிகர் அனுபம் கேர் கொந்தளித்துள்ளார்.
கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி, ‘மனிகர்ணிகா’ திரைப்படம் வெளியானது. பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான இந்தப் படம், மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. படத்தில் வரும் சண்டைக் காட்சிக்கு கங்கனாவைப் பலரும் பாராட்டிவந்தனர். இந்நிலையில், பட ஷூட்டிங்கின்போது எடுக்கப்பபட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோவில், கங்கனா குதிரை ஒன்றின்மீது சவாரிசெய்வதுபோன்ற காட்சி அது. பொம்மை குதிரையின்மீது அமர்ந்து போருக்குச் செல்வதுபோல அந்தக் காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்து, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். `கங்கனா ரனாவத்தின் 10 விநாடி தேசியவாதத்தை வரையறுக்க முடியுமா?’ என்று யூடியூபர் ஒருவர் வீடியோவைப் பகிர்ந்து ட்ரோல் செய்துள்ளார்.
கங்கனாவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அனுபம் கேர், அவரது பதிவை சுட்டிக்காட்டி, பதிலடிகொடுக்கும் வகையில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், `நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக எவ்வளவு விஷமத்தனம் இவருக்கு. இதுக்குப் பேர்தான் நடிப்பு, இடியட். உலகம் முழுவதும் நடிகர்கள் இதைத்தான் செய்கிறார்கள். அது அவர்களின் வேலை. படங்களில் அவர் செலுத்தும் கடின உழைப்பு காரணமாக ஆண்டாண்டுகளுக்கு அவர் நினைவுகூரப்படுவார். அதேநேரம், அவரது பெயரைப் பயன்படுத்தி 15 நிமிடம் மட்டுமே நீ பிரபலமடைவாய்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்


Leave a Reply