`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ!’ – உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி

‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலும், நாங்கள் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம்’ என உறுதியாக இருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மனதை உடைத்து, கடைசியில் ம.தி.மு.கவை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைத்துவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ம.தி.மு.கவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் ஒரு எம்.பி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு எம்.பி சீட்டில், அக்கட்சியின் பொருளாளரான கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று கணேசமூர்த்தி எம்.பி ஆகியிருக்கிறார். ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுக் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவிகிதத்தை பெறாத காரணத்தால் இந்த தேர்தலில் ம.தி.மு.கவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனது. எனவே, ஈரோட்டில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் கணேசமூர்த்தி சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ அறிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் ம.தி.மு.க போட்டியிட்டிருந்த ‘குடை’ சின்னத்தைப் பெறுவதற்கான வேலைகளிலும் இறங்கியிருந்தனர். கோடைக் காலத்தில் குடை சின்னம் ஒர்க்கவுட் ஆகும். குடை சகிதமாக கூட்டமாகத் தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்தால், மக்கள் மத்தியில் சின்னத்தைப் பதியவைத்துவிடலாம் எனவும் ம.தி.மு.கவினர் கணக்குப் போட்டனர்.
இதற்கிடையே. ஈரோடு தொகுதியை ம.தி.மு.கவிற்கு ஒதுக்கியதில் கடுப்பில் இருந்த தி.மு.கவினர், ‘உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல் ஏதோ ஒரு சுயேச்சை சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிட்டால், நாங்கள் எப்படி தி.மு.க வேஷ்டியை கட்டிக் கொண்டு அவருக்காக வேலை செய்து ஓட்டு கேட்பது. அ.தி.மு.கவினர் வேண்டுமென்றே கணேசமூர்த்தி என்ற பெயரில் பலரைத் தேர்தலில் நிறுத்தினால் மக்கள் எந்த கணேசமூர்த்தி, என்ன சின்னம் எனக் குழம்பிவிடுவார்கள். அப்படி நடந்தால் நிச்சயமாகத் தோல்வி தான்’ என எச்சரித்திருக்கின்றனர். அதனையடுத்து, ஈரோடு மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளார் சு.முத்துசாமி, தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் ஒரு டீம் கணேசமூர்த்தி வீட்டிற்கே சென்று, ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள். எளிதாக ஜெயித்துவிடலாம்’ என பேசிப் பார்த்திருக்கின்றனர். கணேசமூர்த்தியோ, ‘வைகோ சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவதென உறுதியாக நிற்கிறார். அவரிடம் வேண்டுமானால் பேசிப் பாருங்கள்’ என அனுப்பியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக வைகோவிடம் பேசிய ஸ்டாலின், ‘புதிதாக ஒரு சின்னத்தைப் பெற்று, அதை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் அளவிற்கு இப்போது நமக்கு நேரம் இல்லை. தேர்தலுக்குக் குறுகிய நாட்களே இருக்கின்றன. எனவே, மக்களுக்கு நன்கு பரிச்சயமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். நல்ல முடிவாகச் சொல்லுங்கள்’ என வைகோவிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
அதற்கு வைகோவோ, ‘ம.தி.மு.க பொருளாளராக இருக்கும் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில் நிறைய சட்டச் சிக்கல்கள் இருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமானால், கணேசமூர்த்தி ம.தி.மு.க பொருளாளர் பதவியிலிருந்து விலகி, தி.மு.கவின் அடிப்படை உறுப்பினரால் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியும். பிறகு கணேசமூர்த்தியால் ம.தி.மு.கவின் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. எங்களுடைய கட்சியில் அவர் கமிட் ஆகியுள்ள வேலைகளிலும் குழப்பம் ஏற்படும். இதுமட்டுமின்றி தேர்தலுக்காக இப்படியான வேலைகளைச் செய்ததை சுட்டிக்காட்டி, நாளைக்கு யாரேனும் வழக்கு தொடர்ந்தால் கணேசமூர்த்தியின் வெற்றி செல்லாததாக அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் யோசிக்க வேண்டியிருக்கிறது’ என வைகோ கையைப் பிசைந்திருக்கிறார்.

இதனையடுத்து, சட்ட நிபுணர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் ஒருசிலருடன் ஆலோசனை மேற்கொண்ட ஸ்டாலின், கணேசமூர்த்தியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என ஆராய்ந்திருக்கிறார். அதில் ஒருசில வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், ‘எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. தைரியமாக அவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாம்’ எனச் சொல்லியிருக்கின்றனர். இந்தத் தகவலை ஸ்டாலின் வைகோவிடம் தெரிவிக்க, நீண்ட யோசனைக்குப் பின்னரே வைகோ தலையாட்டியிருக்கிறார்.

இருந்தாலும், உதயசூரியன் சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவதில் வைகோவிற்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லையாம். ஒரு தொகுதியை ஒதுக்கியது மட்டுமல்லாமல், அதில் உதயசூரியன் சின்னத்தில் தான் நின்றாக வேண்டும் என நம்மை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்துவிட்டார்களே என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி நொந்ததாகச் சொல்கிறார்கள்


Leave a Reply